இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமலும், ஒருதலைபட்சமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ரூ.199, ரூ.209 மற்றும் ரூ.249 போன்ற மலிவு விலை திட்டங்கள் ஜியோ ஆப் அல்லது குறிப்பிட்ட ஸ்டோர்களில் மட்டுமே கிடைப்பது வாடிக்கையாளர்களைக் குழப்புவதாக டிராய் தெரிவித்துள்ளது. மேலும், ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் தனிச்சலுகை வழங்குவது மற்ற ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், அனைத்துத் திட்டங்களும் எல்லா தளங்களிலும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்த ஜியோ நிறுவனத்திற்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கு மட்டும் வழங்கப்படும் தனித்துவமான திட்டங்களை ரத்து செய்து, அவை அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை மீறினால், முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், அதன் பிறகும் விதிகளைப் பின்பற்றாவிட்டால் தினசரி அடிப்படையில் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த டிராய், வாடிக்கையாளர் நலனே முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளது.

