வங்கதேசத்தின் பைரப் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்த ஒரு வயதுக் குழந்தையை, உயிரைப் பணயம் வைத்து தந்தை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் காண்போரை அதிர வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை, டாக்காவிற்குச் செல்லும் ரயில் பைரப் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்ததால், பயணிகள் பலரும் அவசரம் அவசரமாக இறங்கினர். அப்போது ஒரு தந்தை, தனது ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.
துரதிர்ஷ்டவசமாக, அப்போது நிலைதடுமாறிய குழந்தை தந்தையின் கையில் இருந்து நழுவி, ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையில் இருந்த குறுகிய இடைவெளியில் தண்டவாளத்தில் விழுந்தது.
குழந்தை விழுந்ததைக் கண்டு ஒரு நொடி கூட யோசிக்காத அந்தத் தந்தை, ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து குதித்தார். அங்கே தனது மகனை வாரி அணைத்துக்கொண்ட அவர், நடைமேடையின் சுவரை ஒட்டி தட்டையாகப் படுத்துக்கொண்டார். அவரது தலைக்கு மேலே ரயில் பெட்டிகள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தன.
ரயில் முழுமையாகக் கடந்து சென்ற பிறகு, அங்கிருந்த பயணிகள் அலறியபடி ஓடி வந்து பார்த்தனர். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தந்தையும் குழந்தையும் எவ்வித காயமுமின்றி உயிருடன் இருந்தனர். தண்டவாளத்தில் இறங்கிய தாய், குழந்தையைத் தூக்கி அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டுக் அழுதது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.
மேலும் இந்தத் திக் திக் நிமிடங்கள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "தந்தையின் அன்பிற்கும் தைரியத்திற்கும் ஈடு இணை ஏதுமில்லை" என்று நெட்டிசன்கள் பலரும் அந்தப் பிதாவைப் பாராட்டி வருகின்றனர்.

