நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வந்த வக்கீல் பூலுடையார் (எ) பாண்டி, தனது மனைவி ராஜலட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை ராஜலட்சுமி கடந்த 1-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சாவுக்குப் பூலுடையார் தான் காரணம் என உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடம்போடுவாழ்வு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த பூலுடையாரை, மர்ம நபர்கள் காரில் வந்து சுற்றி வளைத்தனர்.
ஆயுதங்களுடன் வந்தவர்களைக் கண்டு பூலுடையார் தப்பியோடியும், விடாமல் துரத்திய அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார். விசாரணையில், வரதட்சணை கொடுமையால் தனது அக்கா உயிரிழந்ததாகக் கருதி, அவரது தம்பி அருணாசலராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த பழிவாங்கல் கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அருணாசலராஜா மற்றும் ராம் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

