தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இன்று அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் விஜய், 15 ஆண்டுகளுக்கு முன்பே தனது அரசியல் வருகை குறித்து மிகத் தெளிவாகப் பேசியுள்ள தகவல்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டு வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு நடிகராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்; ஆனால் மக்கள் நான் நினைத்ததை விடப் பெரிய உயரத்தில் என்னை அமர வைத்துள்ளனர்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தனது அரசியல் ஆசையையும் மிக நுணுக்கமாக அப்போதே வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.
"நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டது போல, மக்கள் என்னை இன்னொரு இடத்திலும் (அரசியல் அரியணையில்) அமர வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று அன்றே அவர் கட்டியம் கூறியுள்ளார். மேலும், அவசரப்பட்டு அரசியலுக்கு வராமல், அதற்கான அஸ்திவாரத்தைப் பலமாக அமைத்துவிட்டுத்தான் வருவேன் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது இப்போது கவனிக்கத்தக்கது. 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் போட்ட அந்தத் திட்டம்தான், இன்று தவெக எனும் மாபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து அந்தப் பழைய பேட்டியைத் தற்போது இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

