சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த முறை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த நீங்கள், இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
திருப்பத்தூர் - மேலூர் நான்கு வழிச்சாலை, பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம், சீரான குடிநீர் வசதி மற்றும் சிங்கம்புணரி தானியக் கிடங்கு எனத் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சாடிய உதயநிதி, எடப்பாடி பழனிசாமியை "மோடியின் முரட்டு அடிமை" என்று விமர்சித்தார். ஏற்கனவே பத்து முறை தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமியை, இந்தத் தேர்தலில் 'மொத்தத் தோல்வி பழனிசாமியாக்கி' வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
"ஜாடிக்கேற்ற மூடி" போல மோடியும் எடப்பாடியும் இணைந்து செயல்படுவதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாசிச மற்றும் சங்கிக் கூட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

