தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், "முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம்" என நடிகர் அருண் விஜய் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், நேற்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், அமைச்சர் ராஜ்மோகனுக்குச் செய்தி மற்றும் விளம்பரத்துறை (திரைத்துறை உள்ளடக்கியது) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த நடிகர் விஷால், "அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் திரைத்துறை இலாகா ஒப்படைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. திரைத்துறை சார்ந்த முக்கியக் கோரிக்கைகளை அவரிடம் வைப்பது சரியாக இருக்குமா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். விஷாலின் இந்தக் கருத்து அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
விஷாலின் இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அருண் விஜய் தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "முதலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அதை விடுத்து, தயவுசெய்து முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம். நமது முதலமைச்சர் விஜய் அவர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், நம்முடைய பிரச்சினைகள் என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில், "தயவுசெய்து முதலமைச்சரின் முடிவுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். மாற்றத்திற்காகக் பொறுமையுடன் காத்திருங்கள். இப்போதே நாம் எந்தவொரு அவசர முடிவிற்கும் வர வேண்டாம். எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்"என்று அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதே போன்று பிரபல தயாரிப்பாளர் டி சிவாவும் முதல்வர் விஜயின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது ராஜ்மோகன் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமானவராக இல்லாமல் அந்த துறையிலும் நல்ல அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார். அவருக்கு தமிழ் திரைப்படத்துறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் கண்டிப்பாக தெரியும் அவருக்கு சினிமா துறையில் அனுபவம் உள்ளது. மேலும் இந்த சிறந்த தேர்வை செய்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி என விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

