தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த விவகாரம் திமுக - காங்கிரஸ் இடையே பெரும் வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.
பாலு காங்கிரஸுக்கு எதிராகப் புதிய அரசியல் அஸ்திரத்தை ஏவியுள்ளார்.
"குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பாஜக பல மாநிலங்களில் என்ன மாதிரியான துரோக அரசியலைச் செய்கிறதோ, அதையேதான் இன்று காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தவெக-வோடு கைகோர்த்துச் செய்திருக்கிறது" என்று டி.ஆர். பாலு மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
மேலும், மத்தியில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் காங்கிரஸ் கட்சியே தயங்கி நின்ற காலகட்டத்தில், அவர்தான் அடுத்த பிரதமர் என்று முதன்முதலில் துணிச்சலாக முன்மொழிந்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை மறந்துவிட்டு, சுயநலத்திற்காகக் காங்கிரஸ் இப்படி ஒரு வரலாற்றுத் துரோகத்தை இழைத்துள்ளதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார்.
1971 முதல் நீடித்த நீண்டகால பந்தத்தை முறித்துக் கொண்டு சுயலாபத்திற்காகத் தவெக-வுக்குத் தோள் கொடுத்துள்ள காங்கிரஸின் இந்தச் செயல், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் டி.ஆர். பாலு தனது கண்டனப் பதிவில் விளக்கியுள்ளது அறிவாலயம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

