மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் ஒருபுறம் பதற்றம் நிலவினாலும், மறுபுறம் இந்தியாவுக்கும் அஜர்பைஜான் நாட்டுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்பு 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த அஜர்பைஜான் மீது இந்தியர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இதனால் அந்த நாட்டுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 56 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், தற்போது ஈரானில் சிக்கித் தவித்த 215 இந்தியர்களைத் தனது நாடு வழியாகப் பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து அஜர்பைஜான் பெரும் உதவியைச் செய்துள்ளது.
இந்த மனிதாபிமான உதவிக்காக இந்தியத் தூதர் அபய் குமார், அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பாகிஸ்தானின் நெருங்கிய நண்பனாகக் கருதப்பட்ட அஜர்பைஜான், இப்போது இந்தியாவுடன் காட்டும் இந்த நெருக்கம் பாகிஸ்தானுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடினமான போர்க் காலங்களில் இந்தியக் குடிமக்களுக்குப் பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான கசப்பான பழைய நினைவுகள் மறைந்து புதிய நட்பு மலரத் தொடங்கியுள்ளது.

