பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள மணியாரியில் ஒரு விசித்திரமான திருமண சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக முடிந்து விடைபெறும் நேரத்தில், மணமகன் மீது சந்தேகம் கொண்ட பெண் வீட்டார் அவருக்கு 200 ரூபாய் நோட்டைக் காட்டி அதன் மதிப்பு என்ன என்று கேட்டுள்ளனர்.
மேலும் அதற்கு அந்த மணமகன் அது 2000 ரூபாய் நோட்டு என்று பதிலளித்ததைக் கேட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 200 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாத ஒருவருடன் தன் வாழ்க்கையைத் தொடங்க முடியாது என்று மணப்பெண் பிடிவாதமாக இருந்ததால், அந்த இடத்திலேயே திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தத் திருமணத்தின் பின்னணியில் ஒரு பெரிய மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. பெண் வீட்டார் நடத்திய தீவிர விசாரணையில், முதலில் யாருக்குப் பெண் பார்த்தார்களோ அந்த நபர் திருமணத்திற்கு வரவில்லை என்பதும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு நபர் மணமகனாக வந்து சடங்குகளில் கலந்துகொண்டதும் அம்பலமானது.
இந்நிலையில் இந்த ஏமாற்று வேலையால் ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டார், "பணம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத மற்றும் மோசடி செய்து திருமணம் செய்ய வந்தவருடன் வாழ முடியாது" எனக் கூறி திருமணத்தை ரத்து செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

