ஆந்திர மாநிலம் மாச்சர்லா பட்டணம் 22-வது வார்டு யாதவ பஜாரைச் சேர்ந்த சந்திர சீனு என்பவரின் மகள் சவுடேஸ்வரி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததால் தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
போலீஸ் தலையீட்டிற்குப் பிறகு, பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், ஐந்து நாட்கள் தந்தை வீட்டில் இருக்கும்படி சவுடேஸ்வரி அறிவுறுத்தப்பட்டார். ஆனால், வீட்டுக்கு அழைத்துச் சென்ற அடுத்த நாளே சவுடேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மகள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை நாடகமாடினார்.
ஆனால், போலீஸாரின் தீவிர விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில், தந்தை சந்திர சீனுவே மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் தற்கொலை போலச் சித்தரிக்க தூக்கில் தொங்கவிட்டது உறுதியானது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சந்திர சீனுவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

