தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகப் பதவியேற்க இருந்த விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியலை இன்னும் சமர்ப்பிக்காததால், கவர்னர் ஆர்.வி. அலேக்கர் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.
இதனால், திட்டமிட்டபடி பதவியேற்பு விழா நடைபெறாமல் போனது தவெக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கத் தனது கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களையும் இன்று காலை 10 மணிக்குள் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மெஜாரிட்டிக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி வைப்பது அல்லது சட்ட ரீதியாக இதை எப்படி அணுகுவது என்பது குறித்து செங்கோட்டையன் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கவர்னர் மாளிகையின் இந்த மௌனம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ள நிலையில், பனையூர் கூட்டத்திற்குப் பிறகு மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

