இலங்கை கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கொழும்புவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நரஹேன்பிட்டா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் குளிப்பதை, பாத்ரூம் ஜன்னல் வழியாக இந்த இளம் வீரர்கள் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தலா 50,000 இலங்கை ரூபாயைப் பிணைத் தொகையாகச் செலுத்தி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
ஏற்கனவே தனுஷ்க குணதிலகா மற்றும் துலிப் சமரவீரா போன்ற முன்னணி வீரர்கள் பாலியல் புகார்களில் சிக்கி இலங்கை கிரிக்கெட்டிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களே இதுபோன்ற அநாகரிகச் செயலில் ஈடுபட்டிருப்பது உலக அரங்கில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கையையும் அறிவிக்காமல் மௌனம் காப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கிரிக்கெட் நட்சத்திரங்களாக உருவெடுக்க வேண்டிய இளம் வீரர்கள், கிரிமினல் புகாரில் சிக்கி நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

