உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். கணவனின் தொடர்ச்சியான உடல்ரீதியான துன்புறுத்தல் காரணமாக, சாந்தினி கடந்த மூன்று மாதங்களாகத் தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ஏற்கனவே கணவன் தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இருதரப்பையும் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மதியம் சாந்தினி தனது ஸ்கூட்டரில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாதாரணமாகப் பேச வேண்டும் என்று கூறி ஷாஹித் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சந்துப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஷாஹித் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் சாந்தினியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திலேயே சாந்தினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம், குடும்ப வன்முறை புகார்களில் போலீசார் செய்யும் அவசரச் சமரசங்கள் பெண்களின் உயிருக்கே எப்படி ஆபத்தாக முடிகிறது என்ற கேள்வியையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.

