அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி வான்வழித் தாக்குதலால் ஈரான் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் வகையில், சுமார் 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்த 'பி-1' பாலம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.
மத்திய கிழக்கின் மிக உயரமான பாலமாகக் கருதப்படும் இது, திறக்கப்படும் தருவாயில் இருந்தபோது தாக்கப்பட்டதால் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பு கனவு சிதைந்துள்ளது. இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கின.
மறுபுறம், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு சுமார் 80 ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியர்கள் தங்களது பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த ஒரே நாளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

