ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நிரந்தர மற்றும் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த தலைநகர் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், அமராவதியைத் தலைநகராக மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. முந்தைய அரசு முன்மொழிந்த 'மூன்று தலைநகரங்கள்' திட்டத்தைக் கைவிட்டு, 'ஒரே தலைநகரம் அமராவதி' என்ற இலக்கை எட்ட புதிய மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா மாநில சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இந்த மசோதாவைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (ஏப்ரல் 7, 2026) அதற்கான ஒப்புதலை வழங்கினார்.
இதன் அடிப்படையில், ஆந்திர மாநிலத்தின் நிரந்தர மற்றும் ஒரே தலைநகரம் என்ற அந்தஸ்து அமராவதிக்கு கிடைத்துள்ளது. இனி சட்ட ரீதியாக ஆந்திராவின் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் அமராவதியை மையமாக வைத்தே இயங்கும். தலைநகர் கட்டுமானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் திட்டங்கள் இனி விரைவுபடுத்தப்படும்.
மேலும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமராவதி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வரலாற்று முடிவின் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

