தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ் குமார் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் குமார், அங்கு மூன்றாவது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை காலத்திலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ராஜேஷ் குமார் திறம்படச் செயல்பட்டார். அவரது அனுபவம் மற்றும் கட்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, இம்முறையும் அதே பொறுப்பிற்கு அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் குரலாக இவர் தொடர்ந்து ஒலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

