தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் மாநில அரசியலில் நிலவி வந்த அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்தெறிந்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, விஜய் தனது அரசியல் பயணத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை (மெஜாரிட்டி) எட்டாததால், தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைத் திரட்ட விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமை இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், தவெக மற்றும் அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், தவெகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக முடியும் என்று எதிர்பார்க்கிறேன். இறுதியில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
விஜய்யின் தவெக தனித்து ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுக-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இதனால் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விறுவிறுப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

