தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலக்கட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மனநலனில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள முக்கியச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சமீபகாலமாக, 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுத்தி, அவர்களை மனரீதியாகத் தூண்டி அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குழந்தைகளின் எதிர்காலத்தையும், அவர்களது மென்மையான மனப்பக்குவத்தையும் சிதைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளோ அல்லது பள்ளித் தேர்வு முடிவுகளோ எதிர்பார்த்தபடி அமையாத பட்சத்தில், சில குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தருணங்களில் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது தலையாய கடமையாகும். எனவே, பெற்றோர்கள் பின்வரும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாட்களில் குழந்தைகளுடனேயே இருந்து அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அவர்களிடம் கனிவுடன் பேசித் தெளிவுபடுத்த வேண்டும். குழந்தைகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் ஏதேனும் இக்கட்டான சூழலில் இருந்தாலோ அல்லது மன ரீதியான ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ, 'சைல்ட் லைன்' (CHILDLINE) அமைப்பின் 1098 என்ற இலவச உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை இரவு, பகல் பாராது 24 மணி நேரமும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமுடனும் செயல்பட வேண்டும்" என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

