அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 'கிரீன் சான்வி' என்ற இந்தியக் கப்பல் 46,650 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கிறது. போர்க்காலத்தில் ஈரானின் இந்த உதவியால் இதுவரை ஏழு இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளன, இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த நட்புறவைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் உள்ள ஈரானியத் தூதரகம் நெகிழ்ச்சியான ஒரு வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலேயே குஜராத்தின் லோத்தல் துறைமுகம் வழியாக ஈரானுடன் கடல்வழி வணிகத் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இரு நாடுகளுக்கும் இடையே 4000 ஆண்டுகள் பழமையான பந்தம் இருப்பதை நினைவு கூர்ந்துள்ளது.
ஈரானின் இதயத்தில் இந்தியாவிற்கும், குறிப்பாகக் குஜராத்திற்கும் தனி இடம் உண்டு என்று பாராட்டியுள்ள அந்த நாடு, தற்போதைய இக்கட்டான சூழலிலும் இந்தியாவுடனான வர்த்தக உறவு தொய்வின்றித் தொடர்வதை உறுதி செய்துள்ளது.

