பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் செல்வராணியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றது.
இந்த அதிர்ச்சிகரமான காட்சியை அவரது மகள் கீர்த்தனா சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு உதவி கோரினார். தனது தந்தை பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாயைக் கடத்திச் சென்றதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கீர்த்தனா அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் கீர்த்தனாவிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்ட செல்வராணியை மீட்கவும், கடத்தல் கும்பலைப் பிடிக்கவும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

