கர்நாடக மாநிலம் பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசலுக்கு அடுத்தபடியாக உணவகங்களின் அதீத விலைதான் மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கும்.
தற்போது அருண்ராஜ் பட்டர் என்ற நபர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்திரா நகரில் உள்ள ஒரு பிரபல பப்பிற்குச் சென்ற அவர், மெனு கார்டில் 'Chilly Dusted Gold Fingers' என்ற கவர்ச்சியான பெயரில் ஒரு உணவு ₹150-க்கு இருப்பதைப் பார்த்துள்ளார்.
ஏதோ வித்தியாசமான ஸ்டார்ட்டர் உணவு என்று நினைத்து அதை ஆர்டர் செய்தவருக்கு, தட்டில் வந்ததைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
ஏனெனில், அங்கு வந்தது கடைகளில் வெறும் 5 ரூபாய்க்குக் கிடைக்கும் 'வத்தல்' (Fryums). அதன் மேல் லேசாக மிளகாய்த்தூளைத் தூவி ₹150-க்கு விற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், "என் பரம்பரையிலேயே இதற்காக ₹150 கொடுத்த முதல் ஆள் நான்தான்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், "பெங்களூருவில் நல்ல மார்க்கெட்டிங் இருந்தால் எதை வேண்டுமானாலும் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற்கலாம்" என்றும், "உங்களை ராயலாக ஏமாற்றிவிட்டார்கள்" என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
உணவுகளுக்கு விதவிதமாகப் பெயரிட்டு மக்களைக் குழப்பி அதிக விலைக்கு விற்பது இப்போது ஒரு ட்ரெண்டாகி வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

