பெங்களூரு பைரவேஷ்வர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரதிபா (29). ஐடி இன்ஜினியரான இவர், தனது 11 மாதக் குழந்தை அகஸ்தியாவுடன் வீட்டில் இருந்து பணியாற்றி (Work from home) வந்துள்ளார்.
இவரது கணவர் மகந்தேஷும் ஐடி இன்ஜினியர் தான். நேற்று மாலை பிரதிபா மொட்டை மாடிக்குத் துணி எடுக்கச் சென்ற சமயத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அகஸ்தியா தவறுதலாகப் பாத்ரூமிற்குள் சென்று அங்கிருந்த தண்ணீர்ப் பக்கெட்டில் தலைகீழாக விழுந்துள்ளது. பிரதிபா கீழே வந்து பார்த்தபோது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தனது கவனக்குறைவால் தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கருதிய பிரதிபா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். முதலில் கையை அறுத்துக்கொண்டும், மாத்திரைகளை உட்கொண்டும் தற்கொலைக்கு முயன்ற அவர், அது பலிக்காததால் இறுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் மகந்தேஷ், கதவு திறக்கப்படாததால் மாற்றுச் சாவியைப் போட்டுத் திறந்து பார்த்தபோது, மனைவியும் குழந்தையும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார்.
"மகனின் இறப்பிற்கு நானே பொறுப்பு, இந்த குற்ற உணர்ச்சியுடன் என்னால் வாழ முடியாது" என பிரதிபா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

