அமெரிக்காவில் இந்திய தம்பதி ஒருவர் மிக மோசமான இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காரில் இருந்தபடி அந்த இந்திய தம்பதியை வீடியோ எடுத்த அமெரிக்க நபர், "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களா?" என்று கேட்டு வம்புக்கு இழுத்துள்ளார். அதற்கு அவர்கள் ஆமாம் என்று பதிலளித்ததும், "இந்தியா சிறந்ததா அல்லது அமெரிக்கா சிறந்ததா?" என அடுத்த கேள்வியைக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இந்தியர், "இரண்டு நாடுகளிலுமே பிளஸ் பாயிண்டுகள் உள்ளன, எங்களது குடும்பம் இந்தியாவில் உள்ளது" என்று மிகவும் நாகரிகமாகப் பதிலளித்துள்ளார். ஆனால், அந்தப் பதிலால் ஆத்திரமடைந்த அந்த அமெரிக்க நபர், "இல்லை, நீங்கள் இங்கு இருக்கக் கூடாது, உடனே உங்கள் சொந்த நாட்டுக்கு ஓடிவிடுங்கள். என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்" என மிகவும் அநாகரிகமாக கெட்ட வார்த்தைகளால் திட்டி கத்தியுள்ளார்.
@AyTone4th என்ற எக்ஸ் தளவாசி இந்த வீடியோவை பகிர்ந்து வன்மத்தைக் கக்கியுள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலிலும் கோபப்படாமல் அமைதி காத்த இந்திய தம்பதிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்த இனவெறிப் போக்குக்கு எதிராகக் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

