ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயமடைந்த தருணத்தில், அவர் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருந்ததால் டக்-அவுட்டில் பெரும் பதற்றம் நிலவியதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 3-வது ஓவரில், பிரியான்ஷ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க லுங்கி கிடி முயன்றார். பின்னோக்கி ஓடிச் சென்று பந்தைப் பிடிக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது தலை தரையில் பலமாக மோதியது.
உடனடியாக மைதானத்திற்குள் விரைந்த மருத்துவக் குழுவினர், அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. இதுகுறித்து ஹேமங் பதானி கூறியதாவது,
அந்தத் தருணம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அவர் கீழே விழுந்த ஐந்து நிமிடங்களுக்கு எதற்கும் பதில் அளிக்கவில்லை. 'வலது கையை உயர்த்த முடியுமா?', 'இடது விரலை அசைக்க முடியுமா?' என நாங்கள் கேட்ட எளிய கேள்விகளுக்குக் கூட அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. நாங்கள் அனைவரும் பீதியடைந்தோம். ஆனால், எங்களது பிசியோ கிரெய்க் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு அவரை விரைவாக ஆம்புலன்ஸில் ஏற்றினார். நல்வாய்ப்பாக ஸ்கேன் முடிவில் அவர் நலமாக இருப்பது உறுதியானது.
இந்தக் காயத்திலிருந்து மீண்ட லுங்கி கிடி, மே 5-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் திரும்பினார். தனது பழைய வேகத்துடன் பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இருப்பினும், டெல்லி அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி எளிதாக எட்டியது. கிடியின் சிறப்பான பந்துவீச்சு வீணான நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

