மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில், பழம்பகை காரணமாக பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆர்த்தி பிரஜாபதி என்ற பெண் இரவில் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, திடீரென தடிகளுடன் வந்த கும்பல் அவரைத் தாக்கத் தொடங்குகிறது. கும்பலில் இருந்த ஒருவர் அந்தப் பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுகிறார்.
கீழே விழுந்த பிறகும், அந்தப் பெண் வலியால் துடித்தபடி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய போதிலும், அந்தக் கும்பல் இரக்கமின்றி அவரைத் தொடர்ந்து தடிகளால் சரமாரியாகத் தாக்குகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆர்த்தி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட ஆர்த்தி, அண்மையில்தான் தமக்கு சிலரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பயந்தது போலவே, தனக்கு அச்சுறுத்தலாக இருந்த நபர்களே தன்னைத் தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
">
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, புகாரளித்தும் பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

