இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதரக துணை ஆணையர் நிக் மெக்காஃப்ரே தென்னிந்தியாவின் ஃபேவரைட் உணவுகளான இட்லி மற்றும் வடையை வைத்துச் செய்த ஒரு 'சுவையான' பதிவு இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இட்லி மற்றும் வடையை ரசித்துச் சாப்பிடும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அதற்கு ஒரு மாஸான கேப்ஷனையும் கொடுத்துள்ளார். "ஒரு அனுபவம் வாய்ந்த தூதராக நான் இதில் யாரிடமும் பக்கம் சாயமாட்டேன். இட்லி மென்மையான ஆற்றலை தருகிறது. வடை மொறுமொறுப்பான அதிரடியை தருகிறது. உலக அமைதி நீடிக்க வேண்டுமென்றால், இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுங்கள். சட்னியை மறந்துவிடாதீர்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
ஆரோக்கிய ரீதியாகப் பார்த்தால், ஆவியில் வெந்த இட்லி உடல் நலத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது. மறுபுறம், உளுந்து மாவில் பொரிக்கப்படும் வடை, புரோட்டீன் நிறைந்ததாக இருந்தாலும், அதில் உள்ள எண்ணெய் 120-150 கூடுதல் கலோரிகளைச் சேர்க்கிறது. இருப்பினும், அதன் 'க்ரிஸ்பியான' சுவைக்கு ஈடு இணையே இல்லை.
உணவுப் பிரியர்களிடையே எப்போதும் நடக்கும் 'இட்லியா? வடையா?' என்ற போருக்கு, தன் பாணியில் முற்றுப்புள்ளி வைத்துள்ள நிக் மெக்காஃப்ரேவின் இந்த அதிரடி போஸ்ட், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "எது எப்படியோ, ரெண்டுமே நம்ம ஊர் சொத்து!" என நெட்டிசன்கள் இந்த டிப்ளமசிக்கு லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

