இந்தியாவில் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் 2026 ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிகளின்படி, பான் கார்டு விண்ணப்பிக்கும்போது அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளும்போது பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. குறிப்பாக, அக்டோபர் 1, 2023-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்ற விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கூடுதல் ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, பழைய விண்ணப்ப படிவங்களுக்கு பதிலாக 'படிவம் 93' போன்ற புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் பான் கார்டில் இடம்பெறும் பெயர் மற்றும் விவரங்கள் அப்படியே ஆதார் அட்டையில் உள்ளவாறு இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் என்பது ஒரு அடையாளச் சான்று மட்டுமே தவிர, அது பிறந்த தேதிக்கான முழுமையான ஆவணம் அல்ல என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க முறையான பிறப்புச் சான்றிதழ் அல்லது இதர கல்விச் சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

