சென்னை நங்கநல்லூரில் இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சம் ரசிகர்களைக் கொண்ட பிரபலமான நாகலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணியனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஜவுளிக் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வந்த நாகலட்சுமி, தனது உழைப்பின் மூலம் இரண்டு மகன்களையும் மருத்துவப் படிப்பு படிக்க வைத்தார்.
ஆனால், உருப்படியான வேலை இல்லாமல் இருந்த அவரது கணவர் சுப்பிரமணியனுக்கு, மனைவி தன்னை விடப் புகழோடும் பணத்தோடும் இருப்பது பிடிக்காமல் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுள்ளது. மேலும் நாகலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதும் அவருக்குப் பிடிக்கவில்லை.
மனைவியின் வருமானத்தில் வாழ்ந்து வந்த சுப்பிரமணியன், அடிக்கடி தகராறு செய்து வந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். சமீபத்தில் சென்னை வந்த அவர், மீண்டும் நாகலட்சுமியுடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது அவரை மீண்டும் மதுரைக்குச் செல்லும்படி நாகலட்சுமி கூறியதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், திட்டமிட்டு அரிவாளால் மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கடினமாக உழைத்து முன்னேறிய ஒரு பெண்ணின் வாழ்க்கை, கணவனின் பொறாமையால் இப்படி முடிந்தது அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

