அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு இந்தியா திரும்புபவர்களைச் சமூகம் பார்க்கும் பார்வையில் ஒரு பெரிய மாற்றம் நிலவுகிறது.
இது ஏன் நிகழ்கிறது என்பது குறித்து என்.ஆர்.ஐ இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் வசதி வாய்ப்புகளில் அமெரிக்கா முன்னேறிய நாடாகத் திகழ்வதால், பெரும்பாலான இந்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதை ஒரு வாழ்நாள் கனவாகக் கொண்டுள்ளனர். இதற்காகக் கடினமாக உழைத்து, உயர்கல்வி கற்று, அமெரிக்க நிறுவனங்களில் வேலை பெறுகின்றனர்.
ஆனால், அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும்போது, அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த மரியாதையுடனும், ஒருவித பிரமிப்புடனும் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் இந்தியா திரும்பிய நுபுர் தவே என்பவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் ஒருவரது தனிப்பட்ட குணத்தை விட, அவரது 'அந்தஸ்து' (Status) எனப்படும் சமூக நிலைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவர் என்ற முத்திரை குத்தப்பட்டவுடன், தானாகவே அந்த அந்தஸ்து உயர்ந்துவிடுகிறது.
அமெரிக்காவில் பணிபுரிந்தபோது நான் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அல்லது எங்கு படித்தேன் என்பதை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அங்கே ஒருவரது திறமைக்கும் உழைப்பிற்குமே அங்கீகாரம் கிடைக்கும்.
ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கே நீங்கள் வாங்கும் சம்பளம், உங்களது பதவி, நீங்கள் படித்த கல்வி நிறுவனம் மற்றும் உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இவற்றைச் செய்தால்தான் மக்களிடையே உங்களின் 'நம்பகத்தன்மை'அதிகரிக்கிறது.
இந்தியாவில் உங்களின் சக்தியைக் காட்டாதவரை உங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று நுபுர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலர் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அமெரிக்க வேலை என்பது ஒரு கௌரவச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'திறமையை விட தகுதிக்கே இங்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது' என்பது இந்த வீடியோ மூலம் வெளிப்படும் கசப்பான உண்மையாகப் பார்க்கப்படுகிறது.

