இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படைக்கு எதிராக ஈரான் ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் போர் யுக்தியைக் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களைத் தகர்க்க, பயிற்சியளிக்கப்பட்ட 'டால்பின்' மீன்களைத் தற்கொலைப்படை வீரர்களாக பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இந்தத் திட்டம் பனிப்போர் காலத்து சோவியத் யூனியனின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சோவியத் யூனியனிடமிருந்து பயிற்சியளிக்கப்பட்ட டால்பின்களை ஈரான் வாங்கியிருந்தது. தற்போது அந்த டால்பின்களின் உடலில் அதிநவீன வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைப் பொருத்தி, கடலுக்கு அடியில் மறைந்து சென்று அமெரிக்கப் போர்க்கப்பல்களை மோதி அழிக்க ஈரான் வியூகம் வகுத்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஈரானுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. வழக்கமான போர் முறைகளால் அமெரிக்காவை எதிர்கொள்வதை விட, இது போன்ற 'கடற்படை சீக்ரெட் ஏஜென்ட்' டால்பின்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என ஈரான் கருதுகிறது.
ஈரானின் இந்தத் திட்டத்திற்கு ராணுவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போருக்காகக் கடல்வாழ் உயிரினங்களைப் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இத்தகைய தாக்குதல்கள் நடந்தால், அது உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து சர்வதேச அளவில் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
தற்போது அமெரிக்கக் கடற்படை ஈரானின் இந்த 'டால்பின்' அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

