அவிநாசி தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் காப்பாற்றிய தனக்கே சீட் வழங்கவில்லை என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், 1988-ல் விபத்து ஏற்பட்டபோது ஜெயலலிதா நேரில் வந்து தன்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பழைய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அவர் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை அதிமுகவினர் வந்து பார்க்காதது மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறிய தனபால், அந்த விரக்தியில்தான் தனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் தற்போது தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். மகன் மாற்றுக்கட்சியில் இருந்தாலும், தனக்கு ஆதியும் அந்தமும் அதிமுக தான் என்பதில் தனபால் உறுதியாக இருக்கிறார்.

