தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனையின் போது, பல தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு விஜய் ஏன் வரவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவதாக வேட்பாளர்கள் சிலர் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்த விஜய், பிரச்சார திட்டங்களுக்குச் சரியான நேரத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பதையும், மக்கள் கூட்டத்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சில தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்ததாகவும் விளக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தேர்தலில் மக்கள் எந்த மாதிரியான தீர்ப்பைக் கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொண்டு அவர்களை நேரில் சந்திப்பேன் என விஜய் உறுதி அளித்துள்ளாராம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. தோல்வியோ, வெற்றியோ மக்களின் ஆதரவைப் பெறுவதே தனது முதல் இலக்கு என்பதை விஜய் தனது பேச்சின் மூலம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார்.

