மேற்கு வங்காள அரசியலில் 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் தாய் ரத்னா தேப்நாத் அவர்களின் எழுச்சி, வங்காளத்தின் அரசியல் சிஸ்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
கொல்கத்தாவின் பனிஹாடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரத்னா தேப்நாத், 87,977 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 2011 முதல் திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், ஆளுங்கட்சி வேட்பாளரை 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரத்னா சாதனை படைத்துள்ளார். இது வெறும் அரசியல் வெற்றியாக மட்டுமின்றி, தனது மகளுக்காக நீதி கேட்ட ஒரு தாய்க்கு மக்கள் வழங்கிய தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் 294 தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் வரலாறு காணாத வகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இன்று வெளியான முடிவுகளின்படி, பாஜக 204-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை/வெற்றி பெற்று தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் 4-வது முறை முதல்வர் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் மம்தாவுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல், பாதிக்கப்பட்ட ஒரு குடிமகனுக்கும் முறையற்ற அரசியல் சிஸ்டத்திற்கும் இடையிலான போராக மாறியது. ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் ரத்னா தேப்நாத் பேசும்போது, எனது மகளுக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பெண் முதல்வரே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், நள்ளிரவில் வெளியே செல்வதைத் தவிர்க்கச் சொல்கிறார். இதற்கு எதிராக வங்காளம் போராடும் என்ற அவரது உருக்கமான வரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பெண்களின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்பியது.
தேர்தல் நாளன்று திரிணாமுல் குண்டர்கள் ரத்னாவைச் சூழ்ந்து அச்சுறுத்திய போதும், அவர் வாக்குச் சாவடியை விட்டு அகலாமல் உறுதியாக நின்றார். இது அமைதியான முறையில் மக்கள் மாற்றத்திற்கு வாக்களிக்க ஊக்கமளித்தது. மம்தா பானர்ஜியின் 'லட்சுமி பந்தர்' போன்ற நலத்திட்டங்களை விட, 'பெண்களின் பாதுகாப்பு' என்ற உணர்ச்சிகரமான அம்சம் இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானித்துள்ளது.

