உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்த 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்ததோடு, லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தன. விபத்து நடந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.
ஆனால், அங்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிருக்குக் போராடிக் கொண்டிருந்த 4 பேரை மீட்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ முன்வராமல், லாரியிலிருந்து சிதறி ஓடிய ஆடுகளையும், அடிபட்டு கிடந்த ஆடுகளையும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது கைகளில் அள்ளிச் சுருட்டித் திருடிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வலியால் கத்திக்கொண்டிருந்த போதும், அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடிய இந்த அநாகரிகமான காட்சிகள் அங்கிருந்த சிலரது மொபைல் போனில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
"இவங்க எல்லாம் மனுஷங்களா?" என்று சோசியல் மீடியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோக்ராஜ் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமானமே இல்லாமல் ஆடுகளைத் திருடிச் சென்ற ஆசாமிகளை சிசிடிவி மற்றும் வைரல் வீடியோக்கள் மூலமாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகப் போலிஸ் அதிகாரி சந்திரபூஷன் மவுரியா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

