உத்தரப் பிரதேச மாநிலம் பீலிபித் மாவட்டத்தில், முதலையின் பிடியில் சிக்கிய 14 வயது சிறுவனை அவனது தந்தை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பீலிபித் மாவட்டம்நகரியா சஹ்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்சங்கர். இவர் வெள்ளிக்கிழமை அன்று நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தனது வயலில் கோதுமை அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடன் அவரது 14 வயது மகன் மோகித்தும் உதவியாக இருந்துள்ளார்.
வயலுக்கு அருகிலேயே நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பணியின் இடையே மோகித் நதிக்கரைக்கு அருகில் சென்றபோது, எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் இருந்த முதலை ஒன்று திடீரென பாய்ந்து சிறுவனின் காலைக் கவ்விப் பிடித்தது. நிலைகுலைந்த சிறுவனை அந்த முதலை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.
தன் மகன் மரணக் பிடியில் சிக்கி அலறுவதைக் கண்ட தந்தை பிரேம்சங்கர், ஒரு நொடி கூட யோசிக்காமல் முதலையுடன் நேருக்கு நேர் மோதினார். முதலையின் பிடியிலிருந்து மகனை விடுவிக்க ஆக்ரோஷமாகப் போராடினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, முதலையின் தாடையிலிருந்து தனது மகனை பத்திரமாக மீட்டெடுத்தார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மோகித், உடனடியாக பீலிபித் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் கௌஷேந்திரா தலைமையிலான வனத்துறையினர், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். அறுவடை காலங்களில் நதிக்கரையோர வயல்களில் பணிபுரியும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தன் மகனுக்காக முதலையிடமே மோதிய தந்தையின் துணிச்சலை அந்தப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

