தமிழக அரசியல் களம் புதிய விடியலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.
வேலுமணியின் இல்லத்தில் அரங்கேறி வரும் ரகசியக் கூட்டம் அதிமுக கோட்டையையே அடியோடு அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அழைப்பு விடுத்தும், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் அவரைச் சந்திக்காமல் தவிர்த்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் அதிமுக்கிய மூத்த தலைவர்கள் குவிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த வடதமிழகத்தின் சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து, தற்போது மத்திய மண்டலத்தின் விராலிமலை எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர் மற்றும் தென்தமிழகத்தின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையா ஆகியோரும் இந்த ஆலோசனையில் இணைந்துள்ளனர்.
நேற்று இரவே எடப்பாடியாரிடம் தங்களது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய இந்த கொங்கு மண்டலத்து வேலுமணி, தற்போது மண்டல வாரியாகத் தங்களுக்குக் கீழ் சீட் வாங்கி வென்று வந்த தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தங்களது பிடிக்குள் வைத்துள்ள மூத்த தலைவர்களைத் திரட்டித் தனியாக ஸ்கெட்ச் போடுவது அதிமுக-வில் மிகப்பெரிய பிளவை அப்பட்டமாக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் இதே பரபரப்பான தருணத்தில், இந்த அதிமுக மூத்த தலைவர்கள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடிக்குத் தெரியாமல் தனிக் கூட்டம் நடத்துவது, தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் ரகசிய டீலுக்கான நகர்வா அல்லது அதிமுக-வில் தலைமை மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியா என்ற பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிட்டத்தட்ட 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களும் சென்னைக்கு வந்து தங்கியிருந்தும், அவர்கள் பசுமை வழிச்சாலைக்குச் செல்லாமல் எம்.ஆர்.சி நகர் பக்கமே தங்களது பார்வையை வைத்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளது.

