ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முற்றி வரும் நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை மீட்பதில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் தெற்குப் பிராந்தியத்தில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போரின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அதிநவீன F-15E ரக போர் விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. விமானம் நொறுங்கும் முன், அதிலிருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர்.
தங்கள் நாட்டு விமானிகள் ஈரான் ராணுவத்திடம் சிக்கிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது. உடனடியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், மற்றொரு விமானி ஈரானின் எல்லைப் பகுதிக்குள் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் அமெரிக்க மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஈரானியப் படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே நேரடித் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
மறுபுறம், மாயமான அமெரிக்க விமானியை உயிரோடு பிடிப்பதன் மூலம் போரில் அரசியல் ரீதியாகப் பேரம் பேச ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்காக, "அமெரிக்க விமானியைக் கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்குப் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும்" என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் மக்களின் உதவியுடன் விமானியைப் பிடிக்க ஈரான் முயற்சிக்கிறது.
தற்போதைய தகவல்களின்படி, அமெரிக்காவின் சிறப்பு மீட்புப் படையினர் மாயமான அந்த விமானியைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. போர் தீவிரமாக நடைபெற்று வருவதால், அந்த விமானியை ஈரானிய எல்லைக்கு வெளியே பாதுகாப்பாகக் கொண்டு வருவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. மேலும் ஈரான் விதித்த போர் நிறுத்தக் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இந்த விமானி விவகாரம் போரின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

