பெங்களூரு நகரின் கனமழையில் நனைந்து கொண்டே சவாரி செய்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு, இளம்பெண் ஒருவர் செய்த மனிதாபிமான உதவி இணையதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் ஜே.பி. நகரில் இருந்து கோரமங்களாவிற்கு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்துள்ளார். பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை வெளுத்து வாங்கியது. அந்த ஆட்டோவில் மழைத் தாள்கள் (இல்லாததால், பிரியங்கா மற்றும் ஓட்டுநர் இருவரும் முழுவதுமாக நனைந்துள்ளனர்.
"உங்களுக்குக் குளிரவில்லையா?" என பிரியங்கா கேட்டதற்கு, அந்த ஓட்டுநர் சிரித்துக்கொண்டே "குளிருது மேடம், ஆனா என்ன செய்ய முடியும்?" என்று பதில் கூறியுள்ளார். மேலும், "மழை பெய்கிறது என்பதற்காக எங்காவது ஆட்டோவை நிறுத்தலாம்தான், ஆனால் உங்கள் புக்கிங்கை ஏற்றுக்கொண்டதால் இடையில் நிறுத்தாமல் ஓட்டி வந்தேன்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்தத் தொழில் பக்தி பிரியங்காவை வியப்பில் ஆழ்த்தியது.
சவாரி முடிந்ததும் அந்த ஓட்டுநர் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் கூறினார். அவர் கடும் குளிரில் நனைந்திருந்ததைக் கண்ட பிரியங்கா, உடனடியாக வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது தம்பி அல்லது உறவினரின் புதிய டி-சர்ட் ஒன்றை எடுத்து வந்து அவருக்குப் பரிசளித்தார். அந்த டி-சர்ட்டைப் பெற்றபோது அந்த ஓட்டுநரின் முகத்தில் தெரிந்த புன்னகை விலைமதிப்பற்றது என பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

