தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு தமிழகத்தை ஊழல் மற்றும் மணல் கொள்ளை போன்ற அவல நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், திமுகவில் வாரிசு அரசியலே மேலோங்கி இருப்பதாகவும், சாதாரணத் தொண்டர்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக அரசின் தோல்விகளால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க முடியாது என்றும் பியூஷ் கோயல் உறுதிபடக் கூறினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்கிற தொனியில் அமைந்த அவரது இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

