தமிழகத்தில் 74 வருட அரசியல் வரலாற்றை தமிழக வெற்றிக் கழகம் தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக்கழகம் கிட்டத்தட்ட 108 இடங்களில் அபார வெற்றி பெற்றது.
இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் தமிழ்நாட்டின் தற்போது தொங்கு சட்டசபையே அமைந்துள்ளது. இதனால் சிறிய கட்சிகளிடம் தற்போது நடிகர் விஜய் ஆதரவு கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஒருவேளை எந்த கட்சிக்கு ஆதரவு கிடைக்காவிடில் அடுத்த ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் மீண்டும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். ஆனால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தமிழக வெற்றி கழகம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு ஆதரவளிக்க கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி திருவிக நகரில் பல்லவி, பல்லாவரத்தில் காமாட்சி, ராணிப்பேட்டையில் தாஹிரா, குடியாத்தம் தனி தொகுதியில் சிந்து, குமாரபாளையத்தில் விஜயலட்சுமி, பவானிசாகர் தனித் தொகுதியில் தமிழ்ச்செல்வி, அவிநாசி தனி தொகுதியில் கமலி, திருப்பூர் வடக்கில் சத்தியபாமா, கிருஷ்ண ராயபுரத்தில் சத்யா, கோவை கவுண்டம்பாளையத்தில் கனிமொழி, ராஜபாளையத்தில் ஜெகதீஸ்வரி, சிவகாசியில் கீர்த்தனா, சிவகங்கையில் குழந்தை ராணி வெற்றி பெற்றுள்ளனர்.

