Dailyhunt
சொகுசா வாழ்ந்துட்டு எங்களை பெரிய சாத்தான்னு சொல்லுவிங்களா..! "ஈரான் தளபதியின் உறவினர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா". மார்க்க ரூபியாவின் அதிரடி முடிவு.!!!

சொகுசா வாழ்ந்துட்டு எங்களை பெரிய சாத்தான்னு சொல்லுவிங்களா..! "ஈரான் தளபதியின் உறவினர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா". மார்க்க ரூபியாவின் அதிரடி முடிவு.!!!

ரானிய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் உறவினர்கள் உட்பட, ஈரானிய அரசுடன் தொடர்புடைய நான்கு பேரின் விசா மற்றும் கிரீன் கார்டுகளை ரத்து செய்து அமெரிக்க அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி. அவரது மருமகள் எனக் கூறப்படும் ஹமிதே சுலைமானி அஃப்சர் மற்றும் அவரது மகள் ஆகியோரை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் பரிந்துரையின் பேரில், இவர்கள் அமெரிக்காவில் வசிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு, தற்போது நாடுகடத்தப்பட உள்ளனர். மேலும், ஹமிதேவின் கணவர் அமெரிக்காவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹமிதே சுலைமானி அஃப்சர் குறித்து மார்கோ ரூபியோ தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"ஈரானிய ஆட்சிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கும் இவர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டே அமெரிக்க எதிர்ப்புத் தாக்குதல்களைக் கொண்டாடினர். அமெரிக்காவை 'பெரிய சாத்தான்' என்று குறிப்பிட்டவர்களையும், பயங்கரவாத ஆட்சிக்குத் துணை நின்றவர்களையும் டிரம்ப் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை காசிம் சுலைமானியின் மகள்கள் ஜெய்னப் மற்றும் நர்ஜஸ் ஆகியோர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்று ஒரு பச்சை பொய்; கைது செய்யப்பட்டவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என ஜெய்னப் தெரிவித்துள்ளார். இதுவரை சுலைமானி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அமெரிக்காவில் வசித்ததில்லை என ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மூலம் நர்ஜஸ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே ஈரானிய அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கி வருகிறது.

ஈரானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி லாரிஜானியின் மகள் ஃபாத்திமா அர்தேஷிர் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் விசாக்கள் அண்மையில் ரத்து செய்யப்பட்டன. முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரகப் பணியாளர்கள் சிலரின் விசாக்களையும் அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடித் தூதரக உறவுகள் இல்லாத நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai