பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள 'விசில் புரட்சி', பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி போன்று மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், த.வெ.க-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், விசில் சத்தத்திற்கும் குண்டு சத்தத்திற்கும் வித்தியாசம் இருப்பதை தம்பி விஜய் உணர வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மே 4-ஆம் தேதி வரை த.வெ.க-வினர் கனவு காணட்டும் என்று கூறிய அவர், தற்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள விஜய், விரைவில் அரசியலை விட்டுவிட்டு மீண்டும் சினிமா படப்பிடிப்பிற்கு இடம் தேடிச் சென்றுவிடுவாரோ என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகக் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

