தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏனெனில், இந்தத் தொகுதியில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளன. திமுக சார்பில் இந்திராணி, அதிமுக சார்பில் சத்யபாமா, த.வெ.க சார்பில் கவுரி சித்ரா மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிடுவதால், தாராபுரம் தொகுதி முழுக்க முழுக்க பெண் வேட்பாளர்கள் மோதும் களமாக மாறியுள்ளது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான அவினாசியிலும் (தனி) பெண் வேட்பாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இங்கு திமுக சார்பில் டாக்டர் கோகிலா மணி, த.வெ.க சார்பில் கமலி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், அவினாசி தொகுதியும் தாராபுரத்தைப் போலவே முழுமையாகப் பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதியாக மாறிவிடும். தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காதநிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

