விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார்.
பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த 3 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அதிரடி வாக்குறுதி அளித்தார். மேலும், திமுக அரசு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், இதனால் மக்களின் தலையில் பெரும் கடன் சுமை ஏறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை திமுக முடக்கியுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், தவறு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்தார்.

