மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதால், 'நோ பெட்ரோல்' போர்டுகள் வைக்கப்பட்டு பங்குகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது காரிஃப் விவசாயப் பருவம் தொடங்கியுள்ளதால், தங்களின் விவசாய வேலைகளுக்கு டீசல் தேவைப்படும் விவசாயிகள், சுளுந்து வெயிலையும் பொருட்படுத்தாமல் கேன்களுடன் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், லோனார் தாலுகாவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களும் விவசாயிகளும் கைகளில் கேன்களுடன் அந்தப் பங்கை நோக்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
">
பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகப் பெண்கள் குடங்களுடன் முட்டி மோதுவதைப் போல, டீசலுக்காக மக்கள் அங்கே கூட்டமாகத் திரண்டு ஒருவரையொருவர் முண்டியடித்தனர்.
நாள் முழுவதும் காத்திருந்த மக்களுக்கு டீசல் கிடைத்ததும் ஏற்பட்ட இந்த நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காட்சிகள் அடங்கிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

