மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இது பெட்ரோல், டீசல் விலையை மட்டும் பாதிக்காமல், பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்திச் செலவையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பாட்டில் குடிநீருக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்த மூலப்பொருட்களின் விலை 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், பாட்டில் குடிநீரின் விலையை லிட்டருக்கு 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ஒருவேளை கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலரைத் தாண்டினால், குடிநீர் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் ஏற்கனவே ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் விலை சில இடங்களில் 20 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
எண்ணெய் விலை உயர்வு என்பது எரிபொருளுக்கு மட்டுமல்லாமல், குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

