தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்ற இரண்டே வாரங்களில், தங்களின் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களின் செயலுக்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் அளித்த வாய்ப்பை அலட்சியமாக நினைத்து, சுயநலத்திற்காகப் பதவியை ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார். மேலும், உரிய காரணங்கள் இன்றி இப்படிப் பதவியை ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் தேர்தல் செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணம் என்றும், அதிகாரிகளின் உழைப்பும் நேரமும் இதில் வீணடிக்கப்படுவதாகவும் சரத்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் ஏற்படும் பொருளாதார விரயத்தைக் கருத்தில் கொண்டு, மறுதேர்தல் வரும் பட்சத்தில் அந்தத் தேர்தல் செலவுகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளையும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-விடமே அபராதமாக வசூலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் இந்த குறுகிய கால அரசியல் நிகழ்வுகள் ஆரோக்கியமானது அல்ல என்றும், மறுதேர்தலின் போது வாக்காளர்கள் இப்படிப்பட்டவர்களை முழுமையாகப் புறக்கணித்து உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

