மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஒரே இரவில் அதிரடி அரசியல் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டாயிரத்து இருபத்தியொன்றாம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஓ பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்த அய்யப்பன் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சசிகலாவைச் சந்தித்து அவரது அகில இந்திய பொன்மனச் செம்மல் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அய்யப்பன் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவரை உசிலம்பட்டி தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகச் சசிகலா அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகளில் இருந்து பின்னர் திமுகவிற்குச் சென்று தற்போது சசிகலா தலைமையிலான கட்சியில் அய்யப்பன் தஞ்சம் புகுந்துள்ள விதம் மதுரையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உசிலம்பட்டி தொகுதியில் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனின் இந்தத் திடீர் வருகை தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

