2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தான் போட்டியிடுவதைத் தவிர்த்தது குறித்துப் பேசிய அவர், "நான் போட்டியிடுவதன் மூலம், வரும் தேர்தலில் திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், அதன் விளைவாக ஒரு 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) உருவாகும் என்றும் சிலர் திட்டமிட்டுப் வதந்திகளைப் பரப்புகின்றனர். நான் துணை முதல்வர் பதவியைப் பெறுவதற்காகவே போட்டியிடுகிறேன் என்ற தவறான பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவி ஆசையில் தான் எதையும் செய்யவில்லை என்றும், இத்தகைய பொய் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தான் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தனது அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். திருமாவளவனின் இந்தத் திடீர் அறிவிப்பு, தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

