Dailyhunt
"தோசை மாவால் ஒரே இரவில் ஒரு குடும்பமே அழிந்தது".. 2 பிஞ்சு உயிர்கள் அடுத்தடுத்து பலி. உயிருக்கு போராடும் பெற்றோர். கடையில் வாங்கியதால் வந்த வினையா..?

"தோசை மாவால் ஒரே இரவில் ஒரு குடும்பமே அழிந்தது".. 2 பிஞ்சு உயிர்கள் அடுத்தடுத்து பலி. உயிருக்கு போராடும் பெற்றோர். கடையில் வாங்கியதால் வந்த வினையா..?

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சாந்த்கேடா பகுதியில், கடையில் வாங்கிய தோசை மாவால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்குப் போராடும் நிலையில் அவர்களது பெற்றோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சாந்த்கேடா பகுதியைச் சேர்ந்த விமல் பிரஜாபதி - பாவனா தம்பதியினர், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஒரு பால் பண்ணையில் (Dairy) தயாராக விற்கப்படும் தோசை மாவை வாங்கியுள்ளனர்.

மறுநாள் காலை அந்த மாவைக் கொண்டு தோசை செய்து சாப்பிட்ட விமலுக்குத் தொடர் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், கணவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அறியாத பாவனா, அதே மாவைக் கொண்டு தனது 4 வயது மகள் மிஷ்ரிக்கும் தோசை ஊற்றிக் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் பாவனா மற்றும் சிறுமி மிஷ்ரிக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி மிஷ்ரி மற்றும் 3 மாதக் குழந்தையான ரஹா ஆகிய இரு பிஞ்சுயிர்களும் பலியாயின.

3 மாதக் குழந்தைக்குத் திட உணவுகள் (தோசை) வழங்கப்படாத நிலையில், அது எப்படி உயிரிழந்தது என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. தோசை சாப்பிட்டுப் பாதிக்கப்பட்ட தாய் பாவனா, குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் விஷத்தன்மை குழந்தையைப் பாதித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட 'கன்ஷியாம் டெய்ரி' உரிமையாளர் கேதன் படேல் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "தினமும் 125 கிலோ வரை மாவு விற்பனை செய்கிறோம். அன்று ஒரே ட்ரம்மில் இருந்து பல வாடிக்கையாளர்கள் மாவு வாங்கினர். யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என அவர் விளக்கமளித்துள்ளார். சாந்த்கேடா போலீசார் மற்றும் அகமதாபாத் மாநகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்தப் பண்ணையில் இருந்த மாவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

தடய அறிவியல் ஆய்வகமும் (FSL) இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே, இது உணவில் கலக்கப்பட்ட விஷமா அல்லது உணவுப் பொருட்கள் கெட்டுப்போனதால் ஏற்பட்ட பாதிப்பா என்பது தெரியவரும். மேலும் தற்போது உயிருக்குப் போராடி வரும் விமல் மற்றும் பாவனா ஆகியோருக்குத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai